அடுத்து மூன்று நாட்களுக்கு சுட்டெரிக்க போகும் வெயில்- மக்களே அலெர்ட்டா இருங்க!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மன்னார் வளை குடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 3 மற்றும் 4-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் விண்வெளி செயற்கைகோள்கள் மற்றும் செல்போன் அலைவரிசை பாதிக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 5 செண்டி மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.