“ஆண்களை குறிவைத்து தாக்குகிறதா கொரோனா!?” நீங்கள் 30 வயது ஆண்களா? உஷாராக இருங்கள்..
By Aruvi | Galatta | Apr 08, 2021, 12:36 pm
கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது என்றும், 30 வயது முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது இது வரை இல்லாத அளவிற்குத் தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே போல், தமிழகத்தில் இந்த தாக்கம் எதிரொலித்தது.
அதன் படி, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
முக்கியமாக, தமிழகத்தில் நேற்றை கொரோனா பாதிப்பு என்பது, கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இதில், அதிக பட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இது வரை 4 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.
இது வரை சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரணமாக குணமடைந்து இருந்தாலும், 10 ஆயிரத்து 685 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அத்துடன், சென்னைக்கு இது வரை வெளி மாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளைப் பரிசோதித்ததில், 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, “சென்னையில் அதிகமாக 30 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த வயதுடையோர் தற்போது அதிக பட்சமாக 20.14 சதவீதம் பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், “ 40 வயது முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 வயது முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 வயது முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 வயது முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
அதே போல், குறைந்தபட்சமாக “ 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.
“சென்னையில் இது வரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் உள்ளனர்” என்றும், பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.