இரண்டு மாத குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

gambling

திருச்சி உறையூர் கீழ பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் . இவருடைய மனைவி கைருனிஷா. அப்துல் சலாம் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான கைருனிஷா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் அப்துல்சலாம் வேலைக்கு சரிவர செல்லாத நிலையில் குடும்பச் செலவுக்காகவும், மது குடிப்பதற்காகவும், சூதாட்டத்துக்காகவும் அவ்வப்போது நண்பர்களிடம் கடன் வாங்கி வந்தார். இதில் தனது நண்பரான தென்னூரை சேர்ந்த ஆரோக்கியராஜிடம் பல்வேறு தவணைகளில் பணம் வாங்கியதற்காக அப்துல்சலாம் ரூ.80 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடன் தொகையை கேட்டு அப்துல்சலாமுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் கடன் தொகையை கேட்டபோது, அப்துல்சலாம் தனது குழந்தைகளை வளர்க்கவே சிரமப்படுவதாகவும், அதனால் கடன் தொகையை கொடுக்க முடியவில்லை என்றும் ஆரோக்கியராஜிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் அப்துல்சலாமிடம், உனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், 5-வதாக ஒரு குழந்தை பெற்று அதனை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறாய். ஆகவே ரூ.80 ஆயிரம் கடன் தொகையை நீ கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக, உனக்கு 5-வதாக பிறந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்து விடும்படியும், அந்த குழந்தையை தனது உறவினரிடம் கொடுத்து நல்ல முறையில் வளர்க்க கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அப்துல்சலாம் தனது மனைவி கைருனிஷாவிடம் கூறி அவரை சம்மதிக்க வைத்தார். கடந்த 19-ம் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் அப்துல்சலாம் ஒப்படைத்தார். அந்த குழந்தையை தனது சகலையின் தம்பியான திருச்சி தொட்டியத்தை சேர்ந்த சந்தனகுமாரிடம் கொடுத்து வளர்க்க தெரிவித்தார். சந்தனகுமாருக்கு குழந்தை இல்லாததால் அவரும் அந்த குழந்தையை வளர்த்து வந்தார்.

ஆனால் இதற்கிடையே குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கைருனிஷா தனது கணவர் அப்துல்சலாமிடம் குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்தார். இதைக்கேட்ட அப்துல்சலாம் அவரைக் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைருனிஷா உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடனுக்காக பெற்ற குழந்தையை விற்ற அப்துல்சலாம் மற்றும் அவருடைய நண்பரான ஆரோக்கியராஜ், சந்தனகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.