கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் "மீன் வித்துட்டா வர்ற? நாறும் இறங்கு இறங்கு" என உடலில் துர்நாற்றம் வீசுவதாக அரசு பேருந்தில் இருந்து மீன் விற்கும் மூதாட்டி நடத்துநரால் இறக்கி விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

fish women

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். வயது முதிர்ந்த மூதாட்டியான செல்வம்  மீன் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் செல்வம் நேற்று மாலை மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது. செல்வத்தை கண்ட பேருந்து நடத்துநர் செல்வம் மீது துர்நாற்றம் வீசுவதால் பேருந்தில் பயணிக்க கூடாது என்று  கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மூதாட்டி பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று இது என்ன நியாயம் பேருந்தில் ஏறிய என்னை எப்படி இறக்கி விடலாம்? பெட்டிசன் கொடுப்பேன் என கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டித் தீர்த்தார்.

அதனைத்தொடர்ந்து மூதாட்டியை இறங்கி விட்ட நடத்துநரோ என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர்போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நிற்க அந்த மூதாட்டியோ மீன் வித்திட்டா வர்றே? நாறும் இறங்கு இறங்கு என்று நடத்துநர் கூறியதாக சொன்னதோடு வாணியக்குடி வரை தான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படி பேருந்து நிலைய சுற்றுச் சுவரில் சாய்ந்து வருத்தத்துடன் நின்றார். இந்த காட்சிகளை பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற தற்போது அது வைரலாகி வருகிறது.