திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் கோயிலில் வழிபடவும் மலைமீது செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூரிய உதயத்தை தரிசனம் செய்ய மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான இன்று வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் தடை எதிரொலியாக அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.
மேலும் தைப்பூச நாளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்தும், வேல்குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.