தென்காசி மாணவி தற்கொலையில் 2 பேராசிரியர்கள் கைது! திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
தென்காசி மாணவி தற்கொலை விவகாரத்தில், அதிரடி திருப்பமாக 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே போல், திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்து உள்ள மனோ கல்லூரியில், அங்குள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இந்து பிரியா என்ற மாணவி படித்து வந்தார்.
இந்த சூழலில் தான், தான் செய்யாத தவறுக்காக மன்னிப்புக் கடிதம் தர வேண்டும் என்று, பேராசிரியர்கள் அவரை கண்டித்து கட்டாயப்படுத்தியதால், கடும் மன உளைச்சலுக்க ஆளான மாணவி இந்து பிரியா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், கடும் அதிர்ச்சி அடை்நத மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் “தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி” புளியங்குடி பிரதான சாலையில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, சம்மந்தப்பட்ட கல்லூரியின் பேராசிரியர்கள் வளர்மதி, முத்துமணி ஆகியோர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அத்துடன், இந்த வழக்கில் தகுந்த நவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்த நிலையில், அனைவரும் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
அதே போல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சீத்தாராம்பாளையம் பகுதியை சேர்ந்த 45 வயதான சங்கர், அவரது மனைவி 35 வயதான சந்தனமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 ம் வகுப்பு படிக்கும் அர்ஜுன் என்ற மகனும், 9 ஆம் வகுப்பு படிக்கும் அர்ச்சனா என்ற மகளும் உள்ள நிலையில், மகள் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தான், நேற்று பிற்பகல் நேரத்தில் பள்ளியின் வகுப்பறையிலிருந்த அர்ச்சனா, திடீரென வாந்தி வருவதாகக் கூறி வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில், பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து உள்ளார்.
அந்த மாணவி, 2 வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் அந்த மாணவியின் கால் எலும்பில் முறிந்ததுடன், அவரின் வயிற்றுப் பகுதியில் பலமாக அடிபட்டு உள்ளது.
இதனால், பதறிப்போன சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாக அர்ச்சனாவை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த திருச்செங்கோடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, தற்கொலை செய்து கொண்ட மாணவி அர்ச்சனாவின் பள்ளிப் பையில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் எடுத்து அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.