“கொரோனா அறிகுறியுடன் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்கிற, புதிய வழிக்காட்டி நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 3 வது அலையாக பரவி வருகிறது கொரோனா என்னும் பெருந் தொற்று. அந்த வகையில் நேற்றைய தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது மட்டுமில்லாமல், ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா 3 வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன. 

ஆனாலும், தற்போதைய சில கட்டுப்பாடுகளையும் தாண்டி, கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2 வது அலையை போலவே தற்போது தீவிரமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தான், கொரோனா அறிகுறியுடன் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்து உள்ளது. 

அதன் படி, 

- தனிக் கழிவறை உடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனி அறையில் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

- வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

- சத்தான உணவை சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

- மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. 

- போதுமான அளவு தண்ணீர் பழரசம் குடிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- பிறரிடம் பேசுவதை தவிர்த்து விட வேண்டும் என்றும், அதையும் மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால், சர்ஜிகல் அல்லது என் 95 முககவசம் கண்டிப்பாக அணிந்த பிறகே பேச வேண்டும் என்றும், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

- போதிய ஓய்வும் தூக்கமும் மிக அவசியம். 

- சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

- அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளைக் கழுவ வேண்டும்.

- கிருமி நாசினியை பயன்படுத்தவும் தவறக்கூடாது. 

- டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.