ஊரடங்கு நேரத்தில் வெளியூர் போக போறீங்களா..? பேருந்துகளின் நேர அட்டவணை விபரங்கள் இதோ..
By Aruvi | Galatta | Apr 20, 2021, 04:57 pm
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நேரத்தில் வெளியூர் செல்லும் சக பயணிகள் வசதிக்காக, பேருந்துகளின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
இதனால், டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதே போல் இந்த மாதம் கடைசி வரை இனி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, பகல் நேரத்தில் கூடுதலான பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல தனியார் பேருந்துகளுக்கு இணையாக, அரசு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்த பேருந்து போக்குவரத்து தொடர்பாக மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு மற்றும் கோவைக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது.
“மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு காலை முதல் மாலை 5.45 மணி வரையும் அரசு பேருந்துகள் இயக்கப்படும்” என்றும் கூறப்பட்டு உள்ளது.
அதே போல், “பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வரை செல்லும் பேருந்துகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், பழனி, கரூர் மற்றும் கம்பம் வரை செல்லும் பேருந்துகள் இரவு 7 மணி வரை இயக்கப்படும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல், தேனி மற்றும் பெரியகுளத்துக்கு இரவு 8 மணி வரையும், நிலக்கோட்டைக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்” என்றும், கூறப்பட்டு உள்ளது.
“மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவிலுக்கு மாலை 5 மணி வரையும், ராமேஸ்வரம் மற்றும் தென்காசிக்கு 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், “மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலிக்கு இரவு 7 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
“சிவகங்கை, கோவில்பட்டி மற்றும் சிவகாசிக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்” என்றும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதே போல், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “சேலத்தில் இருந்து ஈரோடு, தருமபுரி மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், “சேலத்தில் இருந்து சென்னைக்கு அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.