முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். நேற்று காலை தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற மு.க. ஸ்டாலினுக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சரியாக நேற்று மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மு.க. ஸ்டாலின், பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். அப்போது, தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கிட்டதட்டக 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது, “தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க” வலியுறுத்தினார். இவற்றுடன், “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜிஎஸ்டி தொகை” குறித்து பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இப்படியாக, பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடங்கள் வரை நடைபெற்றது. பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க. ஸ்டாலின், “பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று, தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது, சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.