“முதல்வர் பதவி மீது ஆசை இருக்கலாம்.. ஆனால் வெறி இருக்கக் கூடாது” என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து நாகர்கோயில் பயணியர் விடுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்த மாணவ மாணவிகள் 13 பேரை சந்தித்து முதலமைச்சர் பேசினார். அதன் தொடர்ச்சியாக, கிறிஸ்துமஸ் விழா மேடையில் முதலமைச்சர் பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடினார். 

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மதநல்லிணக்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அன்பு கருணை எனும் இயேசுவின் போதனை அடிப்படையில், கிறிஸ்தவ நிறுவனங்கள் பல்வேறு நற்பணிகளைச் செய்து வருவதாக” கூறினார்.

“கிறிஸ்தவ நிறுவனங்களின் அறப்பணிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாகவும், கிறிஸ்துவர்களுக்கு தமிழக அரசு அளித்து வரும் பல்வேறு உதவிகளையும் முதலமைச்சர் பட்டியலிட்டு நினைவு கூர்ந்தார். 

மேலும், “சிறப்பானப்பணிகளை மேற்கொள்ளும் தமது அரசை சிலர் திட்டமிட்டு வேண்டுமென்றே குறை கூறுவதாகத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி,  தாம் முதல்வர் என்பதை பதவியாகக் கருதவில்லை என்றும், அதை ஒரு பணியாகவே செய்வதாகவும்” தெரிவித்தார். 

முக்கியமாக, “எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசு நாதர் பார்த்துக்கொள்வார்” என்றும், முதலமைச்சர் ஆவேசமாகப் பேசினார். அப்போது, பொது மக்கள் மத்தியில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.

“பதவி ஆசை தேவை என்றும், அதே நேரத்தில் பதவி வெறி இருக்க கூடாது” என்றும், அவர் எதிர் கட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

குறிப்பாக, “பதவி வெறி இருந்தால், அது கண்ணை மறைத்து விடும்” என்றும், யாரையோ குறிப்பிட்டு பேசுவது போல் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

“இளமைப் பருவத்தை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம் என்றும், தமது ஆட்சியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, இங்கிலாந்தில் வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி வரும் 28 ஆம் தேதி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அதே போல், வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் மத்தியக் குழுவிடம் புரெவி புயல் பாதிப்பு நிவாரணமாக 1514 கோடி ரூபாய் கோர இருப்பதாகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

அதே போல், “பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வீடு தேடி வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசை 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும்” என்றும், நியாய விலைக்கடை பணியாளர்களுக்குத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.