மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..
By Aruvi | Galatta | Jun 12, 2021, 12:40 pm
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த மேட்டூர் அணையின் மூலமாக பாய்ந்தோடும் தண்ணீரின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.
அத்துடன், தமிழகத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு மேட்டூர் அணையின் மூலமாக பாய்ந்து வரும் தண்ணீர் முக்கிய பங்களிக்கிறது.
அதன் படி, இந்த ஆண்டுக்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து, மதகுகள் வழியாகத் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. அப்படி சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மலர்களைத் தூவி வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டதுடன், மேட்டூர் அணியில் இருந்து 18 வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தமிழக விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 7 முதல் 10 நாட்களில் காவிரி கடைமடை பகுதிகளுக்குச் சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஜூன் மாதம் சரியான நேரத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் விவசாயிகள் பலரும், மகிழ்ச்சியுடன் தங்களது வழக்கமான விவசாயப் பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.
அதே நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும்” என்று, குறிப்பிட்டார்.
“காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, உணவுத்துறையில் தமிழகம் புதிய சாதனை படைக்கும்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின், நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதே போல், “திருச்சி மாநாட்டில் உறுதி அளித்தபடி, வேளாண் துறைக்கு திமுக முக்கியத்துவம் அளிக்கும்” என்றும், ஸ்டாலின் பேசினார்.
அத்துடன், “குடிமராமத்து திட்டம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த ஆட்சியில் நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்றும், தற்போது அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
“9 மாவட்டங்களில் 65 .01 கோடி மதிப்பில் 647 பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும், இதன் மூலம் 4,061 கிலோ மீட்டர் தூரம் காவிரி ஆற்றில் தூர்வாரப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்தார்.
மேலும், “தமிழகத்தில் தற்போது கொரோனா படிப்படியாகக் குறைந்துள்ளது என்றும், குறிப்பாக சென்னை, கோவையில் ஆட்சிக்கு வந்தபோது இருந்த கொரோனா எண்ணிக்கையை விட, தற்போது கொரோனா தொற்று அதிகமாகவே குறைந்துள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழகத்தில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லா நிலையை தற்போது நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றும், மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, “கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடுவதைப் பொதுமக்கள் குறைக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிய வேண்டும் என்றும், பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “ வரும் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு உத்தேசமாக தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இன்னும் அந்த தேதி உறுதியாகவில்லை” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.