இனி போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் : அதிரடி காட்டும் தமிழக அரசு
தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்த்றை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் அரசுக்கு அளித்த கருத்துருவின் அடிப்படையில், தமிழ்நடு அரசுப் பணியாளர் தேவாணையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தெரிவு முகமைகளால் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு, அவ்வாறே ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
மேற்படி ஆணையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த வரையில் கட்டாய தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிகளில் நடத்தப்படும்.
1. தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying paper) தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
2. தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
3. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் அல்லது தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தொகுதி1 , 2 மற்றும் 2 ஏ ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்:
1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் கொண்டதாக உள்ள தொகுதி 1, 2, 2 ஏ ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் (Descriptive type) வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.
2. மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது), மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புஅள் கொண்டதாக நடத்தப்படும்.
3. இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித் தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் அல்லது தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
5. ஒரே நிலை கொண்ட (Single Stage Examination) தேர்வுகளின் (தொகுதி 3 மற்றும் 4) நடைமுறைகளின் விவரம்:
1. தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
2. தொகுதி 3, 4 போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்கு தமிழ்மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி அ என கொள்குறி (Objective type) வகையில் அமைக்கப்படும்.
3. பொது அறிவு, திறனறிவு (Aptitude) , மனக்கணக்கும் நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி ஆ என கொள்குறி (Objective type) வகையில் நடத்தப்படும்.
4. பகுதி அ வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பகுதி ஆ வில் எழுதிய தேர்வுத் தாளும் இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும்.
5. இவ்விரண்டு பகுதிகளில் பகுதி அ மற்றும் ஆ அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
6. ஒரே நிலை கொண்ட இதர போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்:
1. தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
2. மேற்படி தமிழ்மொழி தேர்வானது, பகுதி அ என கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படாது.
3. இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்சி பெற்றால் மட்டுமே பகுதி ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள் அல்லது தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.
7. இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும்.
8. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தெரிவு முகமைகளை பொருத்தவரையில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிபாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்.
9. அவ்வாறே தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்தவரையில் தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் நிதித் துறையால் வெளியிடப்படும். மேலும் தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.