“தமிழகத்தில் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும்” ஆளுநர் ஆர்.என்.ரவி வற்புறுத்தல்.. “பாஜகவிற்கு மறைமுக ஆதரவா?”
“தமிழகத்தில் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும்” என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வற்புறுத்தி உள்ள நிலையில், “பாஜகவின் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி, மறைமுகமாக ஆதரிக்கிறாரா?” என்கிற விமர்சனங்களும் எழத் தொடங்கி உள்ளன.
அதாவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக, தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தின வாழ்த்துச் செய்தியை தற்போது வெளியிட்டு உள்ளார்.
அதில்,
- அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை.
- அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் உள்ள எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது.
- தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது, அரசுப் பள்ளிகளில் மட்டும் அவர்களுக்கான நம்பிக்கையா இருந்து வருகிறது.
- நீட் தேர்வுக்கு முன்பு 1 சதவீத்திற்கு குறைவாகவே அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
- ஆனால், தற்போது 7.5 சதவீதம் பேர் உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
- உயர் கல்வி, பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும், பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம்.
- தமிழ் மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறிய செய்கிற அதே நேரத்தில், பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் என்றும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, வற்புறுத்தி உள்ளார்.
இதனிடையே, தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சி எம்.பி.கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சமீபத்தில் தான் டெல்லி சென்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்தித்து நீட் விலக்கு தொடர்பாக வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தான், தமிழக ஆளுநரின் இந்த கருத்துகள், தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மிகுந்த முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களையும் இணையத்தில் தொடர்ச்சயாக தெரிவித்து வருகின்றனர்.