“ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
“நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் சரியாக செய்யவில்லை” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவினை ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார்.
தமிழக ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, “அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய” தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் சற்று முன்னதாக கூடி முடிவு செய்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டமானது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலமையில் சற்று முன்னதாக நடைபெற்றது.
காலை 11 மணி அளவில் தமிழக அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 10 கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம் என்றும், ஆனால் ஒவ்வொரு மாநிலமும் பிளஸ் டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏற்கனவே மத்திய உயர் கல்வித் துறை கூறியுள்ளது” என்றுபதையும் குறிப்பிட்டார்.
இத்துடன், “நுழைவுத் தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஏற்கனவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார் என்றும், அதனை நீதிமன்றமும் உறுதி செய்தது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை தமிழக ஆளுநர் செய்யவில்லை” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதே போல், இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் மசோதா குறித்த கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜகவை எதிர் காலத்தில் மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றும், கூறினார்.
இதனிடையே, “நீர் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது” என்று, நேற்றைய தினம் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னதாக “நீட் மசோதா தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை” என்றும், அதிமுக தலைமை கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக சார்பில் யாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.