பாஜக வெளிநடப்பு.. “தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி உறுதி” அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை
அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து பாஜக வெளியேறிய நிலையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உறுதி” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் நீட் தேர்வை கொண்டு வந்தது.
இந்த நீட் தேர்வுக்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதனையடுத்து, நீட் தேர்வலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டமானது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சற்று முன்பாக தொடங்கி நடைபெற்றது.
அதாவது, தமிழக சட்டசபையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காத காரணத்தால், இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, தமிழக சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள், நீட் தேர்வு குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அத்துடன், திமுக சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன்” என்று, குறிப்பிட்டார்.
அதே போல், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வலியுறுத்தினார்கள்” என்றும், அவர் கூறினார்.
“அதன் தொடர்ச்சியாகவே, நீட் விலக்கு சட்ட முன் வடிவானது செப்டம்பர் 13 ஆம் தேதி, தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றினோம் என்றும், அதன் பிறகு இந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் என்றும், ஆனால் இந்த நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார்” என்றும், முதலமைச்சர் கவலைத் தெரிவித்தார்.
மேலும், “மாநில உரிமையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறி ஆனதால் தான், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசரமாகவும், அவசியத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றும், இன்றைய கூட்டத்திற்கு விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார் என்றும், நமது அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான்” என்றும், முதலமைச்சர் சூளுரைத்தார்.
முக்கியமாக, “தமிழக மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
அப்போது, “நீட் தேர்வு விவகராத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்றும், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது” என்றும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நீட் விலக்கு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். நீட்விலக்கு தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
இதனிடையே, நீட் தேர்வு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.