“உங்க வீட்டுக்கு வந்தால் சாப்பாடு போடுவீர்களா?” நரிக்குறவர் மாணவிகளிடம் கேட்ட முதலமைச்சர்!
“உங்க வீட்டுக்கு வரும் போது எனக்கு சாப்பாடு போடுவிங்களா” என்று, நரிக்குறவர் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
சென்னை ஆவடியை சேர்ந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த மாணவிகளை, நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை செயலகத்துக்கு அழைத்து நேரில் பேசி கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அந்த மாணவிகள் குடியிருந்து வரும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த சக மாணவிகளிடம் கலந்துரையாடி அமைச்சர் நாசர், அப்போது தனது செல்போன் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேச வைத்தார்.
அதன்படி, செல்போன் மூலமாக வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அங்கிலுந்த சக மாணவிகளும் உரையாடினர்.
அப்போது அந்த மாணவிகளின் பெற்றோர் பேசும் போது, “‘நீங்கள் நேற்று எங்கள் மாணவிகளை பார்த்து பேசியது ரொம்ப சந்தோஷம்” என்று, தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “சார், நீங்கள் எங்கள் வீடுகளுக்கு வந்து பார்த்தால் நாங்கள் இன்னும் ரொம்பவும் சந்தோஷப்படுவோம்” என்றும், கூறியுள்ளனர்.
இதற்கு, பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் ஒரு வாரத்தில் அங்கு வருகிறேன். நாளையும், நாளை மறுநாளும் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதை முடித்துவிட்டு உங்களை வந்து நேரில் பார்க்கிறேன்” என்று, கூறினார்.
இந்த பதிலை கேட்டதும் அந்த மாணவிகள், “‘நீங்கள் பேசுவதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று, பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது, ஒரு மாணி “எங்கள் வீட்டுக்கு நீங்கள் வருவீர்களா?” என்று, மீண்டும் கேட்டு உள்ளார்.
இதற்கு, பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘“கண்டிப்பாக நான் வருகிறேன். உங்கள் வீட்டிற்கு வந்தால் எனக்கு சாப்பாடு போடுவீர்களா?” என்றும், கேட்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அந்த பள்ளி மாணவிகள், “‘கண்டிப்பாக வாருங்கள். கறிசோறு போடுகிறோம்” என்று, சிரித்துக்கொண்டே பெரும் மகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர்.
அத்துடன், “நாங்கள் படித்தது வீணாகி போகாமல் இருக்க, எம்.பி.சி. படிப்பு சான்றிதழில் இருந்து எங்களை பழங்குடியினருக்கான சான்றிதழாக மாற்றித்தர வேண்டும்” என்றும், அந்த மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டப்படி, சட்டத்த்திற்கு உட்பட்டு உங்களுக்கு கட்டாயம் செய்து தருகிறேன்” என்றும், அவர் கூறினார்.
இதனிடையே, நரிக்குறவர் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்க வீட்டுக்கு வரும் போது சாப்பாடு போடுவிங்களா?” என்று கேட்டது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.