“ 'மக்களிடம் செல், மக்களோடு வாழ்' என்ற தாரக மந்திரத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது” முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
“மக்கள் நல அரசாக அனைவரையும் அரவணைத்து செல்ல கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார்.
இன்றைய தினம் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவது தொடர்பாக 4,755 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆனது.
அதன் பிறகு, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், “விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளதாக” குறிப்பிட்டார்.
அத்துடன், “பெல்ஜியம் நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக, கடல் நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” அவர் கூறினார்.
“வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும் என்றும், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைத்திட தினமும் 30 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.
“இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அறைகலன் பூங்கா அமைய உள்ளது பெருமைக்குரியது” என்று, பேசிய முதலமைச்சர், “நகரங்கள் மாநகரங்களாக மாற வேண்டும் என்றும், இது வரை 3 முதலீட்டாளர் மாநாடு நடத்தி உள்ளோம்” என்றும், முதலமைச்சர் தெரிவித்தார்.
“அதில், 2 சென்னையிலும் ஒன்று கோவையிலும் நடைபெற்று உள்ளது” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நாள்தோறும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும், 'மக்களிடம் செல், மக்களோடு வாழ்' என்ற, தாரக மந்திரத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” என்றும், முதலமைச்சர் பெருமையோடு குறிப்பிட்டு பேசினார்.
குறிப்பாக, “தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க தினமும் தொழில் நிறுவனங்களை தொடங்கி வைக்கிறோம் என்றும், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு நம்பர் 1 என்ற இடத்தை விரைவில் அடையும்” என்றும், அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்றும், வணிகர்கள், உழவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நிதிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்” என்றும், அவர் கூறினார்.
“தமிழ்நாட்டின் வளத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே நமது அரசின் நோக்கம் என்றும், திராவிட மாடல் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம்” என்றும், முதலமைச்சர் கூறினார்.