கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள் என முந்தைய அ.தி.மு.க. அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் எப்போதும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் ஆண்டின் அதிக மழைப்பொழிவை பெறும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். 

அதன்டி இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டியது. இதனால் தமிழகத்தில் இயல்பை தாண்டிய மழை பதிவானது. இதற்கிடையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைந்து, பனித்தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.

chennai flood MK Stalinஇந்நிலையில் சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது.  இதன்பின்னர் நாள் முழுவதும் கனமழை பெய்தது.  இதேபோல் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.

பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் 4 முக்கிய சுரங்கபாதைகள் இன்று  மூடப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி துரைசாமி சுரங்கப்பாதை , ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை , மேட்லி சுரங்கப்பாதை , ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

இதற்கிடையில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளநிலையில், பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. 

மழை காரணமாக வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை, தி.நகர். ஜி.என்.செட்டி உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். 

MK Stalin Chennai Floodமேலும் மழைநீரை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. 

வெள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றி இன்றுக்குள் சரிசெய்யப்படும். விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும். கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது. விமர்சனம் செய்வதற்கு தயாரா இல்லை. 

அடுத்த பருவமழைக்குள் அனைத்து சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடவடிக்கைகள்  எடுத்து வருகிறோம்” எனக் கூறினார். வானிலையைக் கணிக்கும் இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு உள்ளதா? அதை மாற்றுவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அரசிடம் நினைவூட்டப்படும்" எனத் தெரிவித்தார்.