நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்தை நேரடியாக பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட்ட 10 பேர் சென்னை விமானநிலையத்தில் இருந்து தனி விமான மூலம் கோவை சென்றுள்ளனனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. 

ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுவரை  13 பேரின் உடல்கள்   மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

BIPIN STALIN

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதும் மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்டனர்.   இதனிடையே குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்தை நேரடியாக பாா்வையிடுவதற்காக சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே என் நேரு, கூடுதல் தலைமைச் செயலாளர் உதய சந்திரன், உயர் அதிகாரிகள் டேவிட்சன், உதயசந்திரன், தினேஷ்குமார், நிதின் ஜான், சதிஷ் ஆகியோர் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்:
“ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தை சந்தித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. மீட்பு பணிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு உள்ளூர் பகுதி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நான் செல்ல உள்ளேன்” இவ்வாறு தமது பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.