தமிழ்நாடு பட்ஜெட்.. என்னென்ன அறிவிப்புகள் வெளியாக உள்ளன!
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகள், அரசு வெளியிடும் அறிவிப்புகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்துகிறார். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது என்பது குறித்து விசாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே அதிமுக அரசு தாக்கல் செய்திருந்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து சில மாதங்களுக்கான பட்ஜெட்டாகவே அமைந்திருந்தது. எனவே 2022 -23-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தற்போது தான் தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் இந்த பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கும் அளவுக்கு நிதி நிலைமை இடம் கொடுக்காது. எனவே சில பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
அதனைத்தொடர்ந்து நகைக்கடன் ரத்து செய்யப்பட்டு பல்வேறு விமர்சனங்களுக்கிடையே அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் கல்வி கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கூடாது என மாணவர்களின் கல்வி குறித்து தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒன்றிய அரசையும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கல்வி கடன் ரத்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால் 1.4.2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 6 லட்சம் பேர் உள்ளனர், இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற எந்த பலன்களும் இவர்களுக்கு இல்லை. அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அரசு ஊழியர்களும் இது குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே ராஜஸ்தான், சதீஷ்கர் மாநில அரசுகளை தொடர்ந்து தமிழக அரசும் அறிவிக்கலாம். ஆனால் ஒவ்வொரு துறை வாரியாக இது செயல்படுத்தலாம் என்கிறார்கள்.
இது திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் மக்கள் பெரியளவில் வெற்றியைக் கொடுத்துள்ளனர். எனவே மக்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.