“தமிழ்நாட்டை 2 ஆக பிரித்து விடுவோம்” பாஜக நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..
“தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பிரித்து விடுவோம்” என்று, பாஜகவின் தமிழ் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர் கட்சி என்றாலும், பல விசயங்களிலும் பாஜக தான், தமிழ்நாட்டின் தற்போதைய எதிர் கட்சியைப் போல் செயல்பட்டு வருவதாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை நேரடியாகவே எதிர்க்கத் தொடங்கி இருக்கிறார்.
அண்ணாமலையைத் தொடர்ந்து, பாஜகவின் தமிழ் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனும், தற்போது தமிழக அரசுக்கு எதிராக பேசத் தொடங்கி உள்ளார்.
அதன்படி, “ஆந்திரா, தெலுங்கானா போல் தமிழ்நாட்டையும் 2 ஆக பிரிக்க வேண்டும்” என்று, நயினார்நாகேந்திரன் மிரட்டி இருக்கிறார்.
அதாவது, தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அதன் படி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தான், நெல்லையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் பிரித்து விடுவோம்” என்று, மிக கடுமையாக எச்சரிக்கும் தோரணையில் பேசி உள்ளார்.
குறிப்பாக, திமுக எம்.பி. ஆ. ராசாவின் மாநில சுயாட்சி வழங்க கோரிக்கை விடுத்ததை சுட்டிக்காட்டி பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம்” என்று, எச்சரிக்கும் விதமாக பேசிய அவர், தொடர்ச்சியாக, “ஆந்திரா, தெலுங்கானா போல தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்” என்று, ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், “இங்கு பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என்றும், இரண்டாக பிரிக்கக் கோரி தமிழகத்தில் இனி வரும் காலங்களில் போராட்டம் நடைபெறலாம்” என்றும், நயினார் நாகேந்திரன், வெளிப்படையாகவே தைரியமாகவே பேசினார்.
முக்கியமாக, “தமிழ்நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். நான் சொல்கிறேன் தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்” என்றும், மீண்டும் மீண்டும் அதையே வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து” என்று சுட்டிக்காட்டிய பேசிய அவர், “என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்” என்றும், மீண்டும் ஆனித்தனமாக வலியுறுத்தி கூறினார்.
மிக முக்கியமாக, “ஆந்திராவில், தெலங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்து உள்ளன என்றும், தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்” என்றும், அவர் கூறினார்.
“தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்து உள்ளது என்றும், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பாஜக தலையீடு எதுவும் இல்லை என்றும், மாறாக அதிமுக விவரத்தில் பாஜக எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும்” என்றும், அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், பலரும் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு, எதிர் மறையான கருத்துக்களை கூறி, கடும் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் பாஜவினருக்கும் - பொது மக்களுக்கும் இடையே கருத்து யுத்தம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.