கால் டாக்சி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கணவன் மனைவி இருவரும் கொலை செய்தது தெரியவந்தது. 

death

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஓலப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால் டாக்ஸி ஓட்டுனர் ஆன சனு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து உடல் நேற்று பெற்றுக் கொள்ளப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் புகாரை பெற்று 4 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடைசியாக அவர் பேசிய செல்போன் உரையாடல் மற்றும் தொலைபேசி எண்களை வைத்து டாக்ஸியில் பயணித்த ஸ்டீபன் என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஸ்டீபனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவியான அமலொற்பவம் என்பவரும் சனுவை கட்டையால் அடித்து விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் வைத்திருந்த 6,100 ரூபாய் பணம் லேப்டாப் செல்போன்களை எடுத்து தப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய மரத்தடி, பணம் லேப்டாப் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கணவன் மனைவி மீது ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த 2 கொலை வழக்குகள் ஆயுத வழக்கு திருட்டு உள்ளிட்டவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஸ்டீபன் வேறு ஏதேனும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார் எனவும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதே நேரத்தில் வாடகைக்கு கார் ஓட்டி பிழைப்பு நடத்தும் கார் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.