பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்த ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

teacher

தஞ்சாவூர்மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக பணிபுரிபவர் ராஜ்குமார் அவருக்கு வயது  52. மதுக்கூர் அருகே உள்ள நெம்மேலி இவருடைய சொந்த ஊர். பள்ளியில் மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், ஆசிரியர் ராஜ்குமார் 17 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மாணவி தன் பெற்றோரிடம் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அதையடுத்து, அவர் பெற்றோர் மதுக்கூர் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் ஜெயா, ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவியிடமும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ராஜ்குமாரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, ``என் மீது எந்த தவறும் இல்லை, நான் என்னுடைய மகளாக பார்க்கும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. மாணவி தேர்வில் பார்த்து எழுதினார். அதை தடுத்தபோது தவறுதலாக அவர் மேல் கைபட்டுவிட்டது. இதற்கு என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை, நீங்கள் வேண்டுமானால் என்னை கைது செய்யுங்கள்" என போலீஸாரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, போலீஸார் ராஜ்குமாரை பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறி போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜ்குமார் மாணவிகளிடம் நல்ல முறையில் பழகக் கூடியவர் என்றும், போலீஸார் முறையாக விசாரிக்காமல் அவரைக் கைது செய்து விட்டதாகவும் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து, மாணவி ஒருவர் வாட்ஸ் அப்பில் சக மாணவிகளுக்கு, ``நமக்கெல்லாம் நல் வழிகாட்டி, நல்ல முறையில் பாடம் நடத்திய ஆசிரியர் பொய்யான பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தவேண்டும்" என கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதையடுத்து, மாணவிகள் ஏராளமானோர் ஆசிரியர் ராஜ்குமாருக்கு ஆதரவாக மதுக்கூர் மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும்  மாணவிகள், ``ஆசிரியர் நல்லவர், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த புகாரை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்து மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்" என்று கோஷமிட்டனர். அதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ், டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தை முடித்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சிலரிடம் விசாரித்தோம். ``ஆசிரியர் ராஜ்குமாரும், அவர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ராஜ்குமார் மீது அனைத்து மாணவிகள் மட்டுமல்ல பெற்றோர்களும், `அவர் நல்லவர் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை' என கைது செய்யப்பட்டதும் உறுதிபட கூறி வந்தனர். அதனால், ஆசிரியர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் இந்த விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். அதேபோல, உண்மையில் என்ன நடந்தது என்பதை பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். அதேபோல, தேர்வு நடைபெற்ற வகுப்பில் அந்த ஒரு மாணவி மட்டும்தான் இருந்தாரா?  வேறு மாணவிகளே யாரும் இல்லையா? ஏன் அவர்களிடத்திலும் விசாரணை நடத்தவில்லை? என பல்வேறு சந்தேகங்கள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.

ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மாணவிகளை அமைதிபடுத்துவதிலேயே நிர்வாகம் குறியாக இருந்துவருகிறது. அதனால், `இந்த பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பாட்டால் அதில் எங்களுக்கும் பங்கு உண்டு, அதை துடைக்க வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது' என கூறி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்று தெரிவித்தனர்.