அடையாறு ஆற்றில் குளித்த மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி!
சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாயமான சிறுவர்களை தேடும் பணியை தீயணைப்பு துறையினர் தொடங்கினர்.
சென்னை அரசு பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் சந்தோஷ்குமார் . அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரிஷ் . இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை குளிப்பதற்காக சந்தோஷ்குமாரும், ஹரிசும் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றுக்கு வந்தனர்.
அங்கு ஆற்றில் இறங்கி இருவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், இருவரும் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, ஆற்றில் மூழ்கியதில் இருவரும் உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிண்டி, சைதாப்பேட்டையில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மாயமான இருவரையும் தேடினர். அப்போது, சந்தோஷ்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் ஹரிஷை, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து 2-ம் நாளாக நேற்று காலை சைதாப்பேட்டை, கிண்டி, அசோக்நகர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் 7 ரப்பர் படகுகள் மூலம் அடையாறு ஆற்றில் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். நேற்று இரவு வரை தேடியும் சிறுவன் ஹரிசை கண்டுபிடிக்க முடியவில்லை. 3-வது நாளாக இன்றும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியை தொடங்க உள்ளனர். 2 நாட்கள் தேடியும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியாததால், சிறுவனின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.