“2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதி.. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்” தமிழகத்தில் அதிரடி..
“2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள்” என்று, தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 3 வது அலை அதி தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்றாலும், போலீசாருக்கும் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தான், தெற்கு ரயில்வே சென்னை புறநகர் ரயிலில் பயணிப்போருக்கு புதிய வரைமுறைகளை விதித்து உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “சென்னையில் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள்” என்று, தெளிவுபட தெரிவித்து உள்ளது.
அத்துடன், “மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்” என்றும், தெற்கு ரயில்வே அதிரடியாக கூறி உள்ளது.
அதே போல், “சென்னை புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால், அந்த பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றினாலும் அவர்களுக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31 ஆம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது” என்றும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
“இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்” என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.