“போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை அதிகாரிகள் அழைத்து செல்லும் போது, அவருடன் பாரதிய ஜனதா பிரமுகர்கள் சிலர் இருந்தது” குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
மும்பையிலிருந்து கோவா புறப்பட்டுச் சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 16 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அப்போது மும்பையில் செய்தியாளர்களோடு பேசிய மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், “போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையின் போது, பாஜக பிரமுகர்கள் மற்றும் தனியார் துப்பறியும் நிர்வாகி உடனிருந்தது எப்படி?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.
“மும்பை போதைப்பொருள் சோதனையே போலியானது என்று குற்றம்சாட்டியுள்ள நவாப் மாலிக், தங்களது அடுத்த குறி ஷாருக்கான் என்று கடந்த ஒரு மாதகாலமாகவே போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் செய்தியாளர்களிடம் கூறி வந்ததாகவும்” அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் சர்ச்சைக்குரிய தனியார் துப்பறியும் நிர்வாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்டை அழைத்து செல்லும் போலீசாருடன் பாஜக மாவட்ட நிர்வாகிகள் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், “அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக” கூறினார்.
“எழுந்துள்ள சந்தேகங்களுக்கும், போதைப்போருள் தருப்பு பிரிவு அதரிகாரி விளக்கம் அளித்துள்ளதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லாமல் இருப்பதாக” மராட்டிய மாநில அமைச்சரே, தங்களது சொந்த மாநில போலீசாரின் நடவடிக்கையை மிக கடுமையாக விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இதனால், “பாஜக தலைமையிலான மத்திய அரசால், நடிகர் ஷாருக்கான் குறிவைக்கப்படுகிறாரா?” என்கிற கேள்வியானது பல்வேறு தரப்பினருக்கும் எழுந்திருக்கிறது. இதனை பல்வேறு தரப்பினரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், “எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் இந்த வழக்கில் விசாரணை நடப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்” என்று, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால், “நடிகர் ஷாருக்கானுக்கும் - பாஜகவினருக்கும் என்ன பிரச்சனை இருக்கிறது?” என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.