“அனைத்து சுங்கச்சாவடிகளையும் ஒரே இரவில் ஜேசிபியில் தகர்த்து விடுவேன்” சீமான் ஆவேசம்
“இந்த கையில் ஆட்சியிருந்தால், மற்றொரு கையில் ஜேசிபியை வைத்து தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த டோல்கெட்டையும் ஒரே இரவில் இடித்து விடுவேன்” என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகத் தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எப்போதுமே ஆவேசமாகப் பேசக்கூடிய ஒரு போராளியாக அறியப்பட்டு வருகிறார்.
“தமிழ்நாட்டு காவல் படையைக் கொண்டு கச்சத் தீவை மீட்பேன்” என்று, இதற்கு முன்பு சொன்னதே அவர் எந்த அளவுக்கு ஆவேசம் பொங்க பேசுவார் என்பதற்கு, “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்கிற பழமொழி பொருந்தச் செய்யும். அந்த அளவுக்கு சீமானின் பேச்சில் ஆவேசம் தெறிக்கும்.
அந்த வகையில், சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் 76 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அவர் நினைவைப் போற்றும் நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான், “சுங்கக் கட்டணம் வசூலித்தால், சாலைக்கென்று எதற்குத் தனி வரி வசூலிக்கிறார்கள்” என்று, கேள்வி எழுப்பினார்.
“சாலைகள் போடப்பட்டால் அதற்கான செலவுக்கென ஒரு அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் போலவே எத்தனை ஆண்டு காலம் சுங்கம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “அதையும் கூட ஏன், தனியார் முதலாளிகள் ஏலம் எடுத்து வசூலிக்கிறார்கள்?” என்றும், அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, “என் கையில் ஆட்சியைக் கொடுத்தால், தமிழ்நாடு முழுவதும் உள்ளா அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஒரே இரவில் ஜேசிபியை கொண்டு இடித்து தகர்த்திடுவேன்” என்றும், சீமான் ஆவேசம் பொங்க பேசினார்.
மேலும், “என் மாநில சாலைகளை நான் பராமரித்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு யாருக்கும் தைரியம் இல்லை” என்றும், சீமான் ஆவேசம் பொங்க கூறினார்.
அதே போல், பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசுகையில், “எரிபொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அது பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்காது என்றும், அதனால் அதைக் கொண்டு வர மாட்டார்கள்” என்றும், சீமான் தெரிவித்தார்.