நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு 90 சதவீதம் பணிகள்! சீமானின் புதிய அரசியல் ஆயுதம்..
By Aruvi | Galatta | Aug 20, 2020, 07:19 pm
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசுப் பணியிடங்களில் 90 சதவீத பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவி உள்ள நிலையில், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், உலகின் பல நாடுகளும் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்களும், பொருளாதார சரிவால், வேலை இழந்து மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி உள்ளனர். இதனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் பெருகி வருகிறது. இதன் காரணமாக மிக மோசமான பொருளாதார சரிவால், இன்னும் குறைந்தது ஒரு வருடத்திற்குப் பொருளாதாரம் மீண்டு வராது என்றும், பல மில்லியன் பேர் வேலை இழக்கப் போகிறார்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுப் பணியில் அமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் தமிழர்கள் அரசுப் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் வேலையை இழந்து, விசா நீக்கப்பட்டு நாடு திரும்புகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகள், தங்கள் ஊர் மக்களுக்கு வேலை கொடுப்பதற்குத் தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கும் முன்பாக, சொந்த நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று, பல்வேறு வெளிநாடுகள் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன.
இதனை வலியுறுத்தும் விதமாக, இதே போல ஒரு சட்டத்தைத் தான் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வந்தார். அதன்படி, தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 சதவிகித வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்கும் சட்டத்தையும், அவர் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் இந்த சட்டத்தை அவர் கொண்டு வந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் இதே நிலைப்பாட்டை எடுக்க தொடங்கி உள்ளன.
அதன்படி, இனி மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணிகள் அனைத்தும், சொந்த மாநில மக்களுக்கே வழங்கப்படும் என்று, அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதேபோல், கர்நாடகா மாநிலமும் தங்கள் மாநிலத்தில் வேலை பார்க்க கன்னட மொழி அவசியம் என்று சட்டம் கொண்டு வர உள்ளது. ஆனால், தமிழகத்தின் இந்த நிலைமை தலை கீழாக தற்போது உள்ளதாகத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், “நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசுப் பணியிடங்களில் 90 சதவீத பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்” என்று, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சீமான், “தமிழகத்தில் தமிழர்களின் வேலை வாய்ப்பு தொடர்ந்து சரியத் தொடங்கி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழர்கள் பொருளாதார சரிவு காரணமாக வேலையை இழந்து வருகிறார்கள் என்றும், வட இந்தியர்கள் தமிழகத்தில் இப்போது தான் அதிக வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்றும், தென்னக ரயில்வே முழுக்க வட இந்தியர்கள்தான் நிரப்பட்டு வருகிறார்கள்” என்றும், பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டினார்.
“திருச்சி ரயில்வே பணிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் லாக்டவுனுக்கு இடையிலும் ஆக்கிரமித்தது மிகப் பெரிய விமர்சனத்தைப் பெற்றது” என்றும், சீமான் சுட்டிக்காட்டி உள்ளார்.
“மத்திய அரசுப் பணிகள் மட்டும் இன்றி, தனியார் மற்றும் தமிழக அரசுப் பணியிலும் வெளி மாநில ஊழியர்களே அதிகம் இருக்கிறார்கள் என்றும், அதிலும் சென்னையில் வட இந்தியர்கள் பலர் வேலையில் இருக்க, தமிழர்கள் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்” என்றும், வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார்.
“கொரோனா காரணமாகத் தமிழர்கள் வேலையை இழந்து வரும் நிலையில் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசமே போல் நாமும் சட்டம் கொண்டு வர
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றும், சீமான் வலியுறுத்தி உள்ளார்.