'1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை?” அமைச்சர் அன்பில் மகேஷ்
“தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்” என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கடந்த வாரம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளையும் திறப்பது குறித்து, கடந்த 14 ஆம் தேதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலமாக கடந்த 14 ஆம் தேதி ஆலோசனை நடத்திய அவர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது, “சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம்” என்று வலியுறுத்தி இருந்தார்கள்.
அத்துடன், சில கல்வி அதிகாரிகள் “1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளைத் திறக்கலாம்” என்றும், அப்போது அறிவுறுத்தினார்கள்.
இதனால், “வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கலாம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுறுத்தினார் என்றும் செய்திகள் வெளியானது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும், பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை ,வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.
“ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளைத் திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர் என்றும், பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்றும், கூறினார்.
“கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதைப் பொறுத்தே, பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.