கனமழை காரணமாக  தமிழகத்தில் இன்று கிட்டதட்ட 29 மாவடடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தொடர் கனமழை காரணமாக கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 

வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், இன்னும் அதிக கன மழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இப்படியாக, தமிழ்நாடே கன மழையில் நனைந்துகொண்டு இருக்கும் இந்த மழை கால சூழலில், தொடர் கனமழை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

அதன் தொடர்ச்சியாக, தற்போது தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதே போல், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளது. 

குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், "வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து உத்தரவு வெளியிடப்படுகிறது"  என்று கூறப்பட்டுள்ளது.