“சசிகலா வீட்டு வேலை செய்ய வந்தவர்” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டு வேலைகளைச் செய்ய வந்தவர் தான் சசிகலா என்பதை 'தலைவி' திரைப்படம் சரியாகக் காட்டி உள்ளது” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட “தலைவி” திரைப்படம், இன்றைய தினம் வெளி வந்து உள்ளது.
ஏ.எல் விஜய் இயக்கத்தில், நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, நாசர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்து உள்ள இந்த திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கும், பல எதிர்ப்புகளையும் தாண்டி, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த திரைப்படத்தைச் சென்னை மயிலாப்பூரில் உள்ள திரையரங்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்த்து ரசித்தார்.
'தலைவி' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் “தலைவி” படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று, பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அத்துடன், “வரலாற்றைத் திரித்துக் கூறுவது ஏற்புடையதல்ல என்றும், திமுகவிடம் கணக்கு கேட்டதைத் தொடர்ந்தே, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு வெளியேறினார்” என்றும், சுட்டிக்காட்டிப் பேசினார்.
“ஆனால், மந்திரி பதவி கேட்டே, திமுகவை விட்டு பிரிந்ததாகக் காட்சி வந்திருப்பது தவறான செய்தி” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
“இதனால், தவறாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்றும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இது ஒரு சிறப்பான படம்” என்றும், குறிப்பிட்டார்.
மேலும், “திமுகவிற்கு ஆதரவான வகையிலேயே படம் வெளியிடப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார்.
அதே போல், “எம்ஜிஆரை, ஜெயலலிதா அவமதிப்பது போலிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், எம்ஜிஆரை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை எங்களால் ஏற்க முடியவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.
குறிப்பாக, “சசிகலாவுக்கும் அரசியலாக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர் வீட்டு வேலைகளைக் கவனிக்க வந்தவர் என்பதையும் 'தலைவி' படத்தில் சரியாகக் காட்சிப்படுத்தி உள்ளனர்” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை பற்றி விமர்சித்துப் பேசி உள்ளது, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.