ஜனவரி 27 ல் சசிகலா விடுதலையாவார் என்றும், பிப்ரவரி 5 ல் இளவரசி விடுவிக்கப்படுகிறார் என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன.
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் போது, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின் போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று, தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, தண்டனை ரத்து செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில், நீதிபதி மைகேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா உயிரிழந்ததால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான சசிகலா உட்பட 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாகச் சிறை தண்டனையை, சசிகலா தற்போது அனுபவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், “அபராத தொகையை செலுத்தினால் சசிகலா, வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை கட்ட தவறினால், அவர் மேலும் ஒரு ஆண்டு காலம் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றும், சிறை நிர்வாகம் கூறியிருந்தது.

இதனையடுத்து, அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்தியது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக, சிறையில் இருந்து சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற தகவல்களும், கடந்த இரு மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

அதே நேரத்தில், “பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும், அதிமுக வில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால், அதிமுகவில் பெரிய சலசலப்பு ஏற்படும் என்றும், அதிமுகவில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்றும் அக்கட்சியினரே கூறி வந்தனர்.

இந்நிலையில் தான், சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தற்போது முடியும் தருவாய்க்கு வந்துள்ளது. 

அதாவது, ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும், அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 5 ஆம் தேதி இளவரசி விடுவிக்கப்படுகிறார் என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன. 

அது நேரத்தில், சுதாகரன் இன்னும் அபராத தொகையான 10 கோடி ரூபாயை கட்டாததால், அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவின் வருகையால், அதிமுக தொண்டர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.