கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார சிக்கலை சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மற்றும் அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாடினார்.

Rs 20 lakh crore fund to restore India economy

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் பொருளாதார சிக்கலை சமாளிக்க சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதித் தொகுப்பு ஒதுக்கப்படுகிறது என்றும், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் என்றும், இந்த நிதித் தொகுப்பு பயன்படுத்தப்படும் விவரங்களை மத்திய நிதியமைச்சர் பிறகு அறிவிப்பார்” என்றும் தெரிவித்தார்.  
 
மேலும், “தேசம் உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், உள்நாட்டுப் பொருட்களுக்கு இந்திய மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  
 
“இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவது மட்டும் தான் 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவுக்கு சொந்தமானதாக மாற்றுவதற்கான வழி என்று சுட்டிக்காட்டிய பிரதமர், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் மாற்றங்கள் மக்களின் மன வலிமையை வெளிக்கொணர்ந்துள்ளதாக” குறிப்பிட்டார்.  
 
“நாட்டின் உட்கட்டமைப்பை இந்தியாவின் புதிய அடையாளமாக மாற்ற வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற நம்மை நாமே பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  

“அரசு செய்யும் சீர்திருத்தங்கள் விவசாயிகளின் உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்தும் என்றும், நாட்டின் ஏழை மக்கள் முன்னேற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் தேவை’ என்றும் பிரதமர் கூறினார். 

“இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில், நாட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படவில்லை என்றும், தற்போது தினமும் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும், 2 லட்சம் N95 முகக்கவசங்களையும் தயாரித்து வருவதாகவும்” பிரதமர் சுட்டிக்காட்டினார்.  

Rs 20 lakh crore fund to restore India economy

“இந்த இக்காட்டான சூழ்நிலையில், வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பிவிட்டது என்றும், இந்தியாவின் திறன் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும்” குறிப்பிட்டார்.  

“உலகம் என்பது ஒரே குடும்பம் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும்” என்று“, பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“கொரோனா நீண்ட நாட்களுக்கு நம் வாழ்வில் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நமது வாழ்க்கை கொரோனாவை சுற்றியே இருக்க முடியாது என்றும், நாம் முகக்கவசம் அணிந்து கொள்வோம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம். இதனால், கொரோனா நம்மைத் தாக்க அனுமதிக்கக் கூடாது” என்றும், மோடி கூறினார். 
 
“இந்தியா முழுவதும், மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் என்றும், இதுகுறித்த விவரங்கள் மே 18 ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்” என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.