மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி! - பிரதமர் மோடி
By Aruvi | Galatta | May 22, 2020, 02:34 pm
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆம்பன் புயல், சூப்பர் புயலாக மாறியதை அடுத்து, மேற்கு வங்க மாநிலத்தைப் புரட்டிப்போட்டது. அந்த மாநிலத்தைப் புயல் தாக்கியதில் பயங்கர சேதம் ஏற்பட்டதுடன், அந்த புயலில் சிக்கி 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்துடன், அந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த மாநிலத்தில் உள்ள விவசாய பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மேலும், அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதனால், அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. பல கிராமங்கள் எந்தவித தொடர்புகளுமின்றி தனித் தீவு போல காட்சி அளிக்கிறது.
அதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஆம்பன் புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காகப் பிரதமர் மோடி, இன்று கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “அம்பன் புயலால் மேற்கு வங்காளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக” கவலைத் தெரிவித்தார்.
“புயல் பாதிப்பு நிலைமையைச் சீராக்கும் வகையில், மேற்கு வங்க அரசுக்கு முதல்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை அளித்தார்.
மேலும், “புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதி அளிக்கப்படும் என்றும், அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.