“சம்மதத்துடன் உறவுகொண்டதால் பாலியல் வன்புணர்வாகாது” அதிமுக மு.அமைச்சர் மணிகண்டனின் மனு! நடிகை சாந்தினி பதிலளிக்க உத்தரவு..
“சம்மதத்துடன் உறவுகொண்டதால் பாலியல் வன்புணர்வு ஆகாது” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாக்கல் செய்த மனுவுக்கு, நடிகை சாந்தினி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, பிரபல துணை நடிகை சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
நடிகையின் இந்த பாலியல் புகாரின் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த மாதம் 20 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
பின்னர், மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அத்துடன், இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, “எனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மணிகண்டனுக்கு உத்தரவிடக் கோரி” துணை நடிகை சாந்தினி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது, பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நான் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாகவும், கூறப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், “முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை என்றும், எனக்கு எதிராகக் குறிப்பிட்டுக் குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
குறிப்பாக, “எனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்த பிறகே, சம்மதத்துடன் உறவுகொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது” என்று, குறிப்பிட்டுள்ள மணிகண்டன், “கட்டாயப்படுத்தி நான் கருக்கலைப்பு செய்யவில்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.
மேலும், “சம்மந்தப்பட்ட துணை நடிகையின் எந்தப் புகைப்படத்தையும் நான் வெளியிடப்படவில்லை என்றும், எனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானது” என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தன்னிடம் பணம் பறிக்க முயன்ற போது, அதற்கு இணங்க மறுத்த காரணத்தால், நடிகை தனது மனுதாரருக்கு எதிராகப் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான அவர் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனால் இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றும், வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.
முக்கியமாக, மணிகண்டன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், துணை நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.