“நீட் விலக்கு மசோதா தொடர்பான நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார்” என்று, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கர்ஜனை என கர்ஜித்து வருகின்றனர்.

அதாவது, நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும், ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான், இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால், கிட்டத்தட்ட 142 நாட்கள் சென்ற பிறகு, தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று, ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக” அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி,  மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து, அதனை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முடிவு செய்தார். 

அந்தபடியே, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கூட்டம் தொடங்கியதும், தமிழக ஆளுநரின் குறிப்பிட்ட காரணங்களான “உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை என்பதையும், யூகங்களின் படி உருவாக்கப்பட்டுள்ளது” என்பதை சுட்டிக்காட்டி, சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த  விளக்கத்தை முழுமையாக அனைவரும் கேட்கும் வகையில் வாசித்து காட்டினார்.

இதனையடுத்து, நீட் தேர்வு விலக்கு மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்றைய தினம் மீண்டும் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை தமிழக ஆளுநர் முற்றிலுமாக அவமதித்துவிட்டார்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“நீட் விலக்கு மசோதா மீதான ஆளுநரின் கருத்து தவறானது என்றும், இது ஏ.கே.ராஜன் குழுவை அவமானப்படுத்துவதாக உள்ளது” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது என்றும், இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது” என்றும், ஆளுநரின் கருத்தை கடுமையாகவே எதிர்த்து பேசினார்.

மேலும், அரசியல சட்ட அமைப்பில் எந்த சட்டத்தையும் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என்றும், அதை தடுப்பது அரசியல் சட்டததையே கேள்விக்குள்ளாக்குகிறது” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “நீட் விலக்கு மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சி முழுவதும் ஆதரிக்கிறது என்றும், நீட் இந்த மண்ணில் இருந்தே விலக்கப்பட்ட வேண்டும்” என்றும், கூறினார்.

இப்படியாக, தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சார்பாக, அந்தந்த கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தொடர்ச்சியாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.