“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நாங்க ஏன் எழுந்து நிற்கனும்?” ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.
தமிழ்நாட்டில் அதுவும் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்தியா முழுவதும் இன்றைய தினம் 73 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பார்க்கும் போது, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று காலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டலா இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மேலும், இந்த விழாவின் நிறைவில் தமிழக அரசின் மாநிலப் பாடலான, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது, அந்த விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினரான ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் யாரும் எழுந்து நிற்காமல், அலட்சியத்துடன் அமர்ந்தே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை கவரேஜ் பண்ண வந்திருந்த சென்னையில் உள்ள முக்கிய தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் இது குறித்து ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை.. நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று கூறி, அவர்கள் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறுது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தது தொடர்பாக உரிய புகார் அளிக்கும் பட்சத்தில், அரசு ஆணைப்படி விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, சென்னை காவல் துறை கூறியுள்ளது.