சமீபத்தில் வினோதமான தோற்றமுடைய பேரெல்ஐ(Barreleye) எனப்படும் அரிய வகை மீன் இனம் ஒன்று வீடியோவில் சிக்கியுள்ளது.
பொதுவாக மனிதர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்களில் ஒன்று ஆழ்கடல். முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பல கவர்ச்சிகரமான உயிரினங்கள் ஆழ்கடலில் இருக்கின்றன. கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துவிட்ட போதிலும் கூட அத்தகைய உயிரினங்கள் திடீரென தோன்றி மனிதர்களை ஆச்சரியப்படுத்தி இன்னும் ஆழ்கடலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன என்று உணர்த்தும்.
அதனைத்தொடர்ந்து அந்த வகையில் சமீபத்தில் வினோதமான தோற்றமுடைய பேரெல்ஐ(Barreleye) எனப்படும் அரிய வகை மீன் இனம் ஒன்று வீடியோவில் சிக்கியுள்ளது. மாண்டேரி பே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த மீன் குறித்து ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த மீன் வகை ஒளி ஊடுருவக்கூடிய உடலமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய தலை கொண்டுள்ள இந்த மீனின் கண்கள் பச்சை நிறத்தை கொண்டுள்ளன.
இந்நிலையில் மாண்டேரிபே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்திற்கு ஆராய்ச்சி செய்வதற்காக தங்களுடைய தொலைதூரத்தில் இருந்து இயக்கக் கூடிய வாகனம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த வாகனம் சுமார் 650 மீட்டர் ஆழத்தில் இருக்கும் போது இந்த பேரெல்ஐ வகை மீன் இருந்துள்ளது. அந்த வாகனம் மூலம் பதிவு செய்யப்பட்ட 27,600 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவில் பேரெல்ஐ மீன் வெறும் 9 முறை மட்டுமே காணப்பட்டுள்ளது.
மேலும் பேரெல்ஐ மீன் தோன்றும் வீடியோவை மாண்டேரி பே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 9-ம் தேதி யூடியூப்-ல் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த மீனினம் ஒளிஊடுருவக்கூடிய தலைக்கவசத்தைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனின் கண்கள் ஒளி உணர்திறன் கொண்டவை என்றும் இந்த மீன்களால் அதன் கண்களை மேல்பக்கத்தில் நேராக மற்றும் தலைக்கு முன்னால் நிலை நிறுத்தி பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.ஏ.ஆர்.ஐ ஆராய்ச்சியாளர்கள் பேரெல்ஐ மீனின் இயற்கையான வாழ்விடத்தில் அதை ஆவணப்படுத்திய பிறகே இந்த வகை மீன்கள் ஒளி ஊடுருவக்கூடிய தலைக்கவசத்தைக் கொண்டுள்ளதை மற்றவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். பீப்பாய் மற்றும் குழாய் வடிவத்தில் அதன் கண்கள் இருப்பதால் இந்த மீனிற்கு பேரெல்ஐ(Barreleye) என்று பெயரிடப்பட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.