சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளிகளை மீட்க சென்ற மருத்துவர்கள் மூச்சு திணறலால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. ஆசியாவில் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் விபத்தை கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். அங்கு பதற்றமான சூழல் உருவானது. மேலும் தீ விபத்தினால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கல்லீரல் பிரிவில் சிக்கியிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து மேலும் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. திடீர் தீ விபத்தால் கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அதிகளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்க சென்ற 5 மருத்துவர்களுக்கு புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜூவ் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 32 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து இந்த தீ விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை பரவி அருகில் இருந்த நரம்பியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த நோயாளிகளை தீயணைப்புத் துறையினரும் நோயாளிகளின் உறவினர்களும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தநிலையில் பத்திரிகையாளர்களும் களத்தில் இறங்கி நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு பக்கம் செய்தி சேகரிக்கும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டே மனித நேயத்துடன் செயல்பட்ட பத்திரிகை, ஊடக உறவுகளின் சேவை பொதுமக்கள் மத்தியில் பத்திரிகை உலகிற்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளது. நோயாளிகளுக்கு மனித நேயத்துடன் உதவிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.