ரஜினி ஆவேசம்.. கமல்ஹாசன் வரவேற்பு..!
By Aruvi | Galatta | 11:40 AM
டெல்லியில் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்துவிடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசியதற்கு, கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாகச் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சொன்னேன்.
டெல்லியில் நடக்கும் போராட்டம் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. உளவுத்துறை அவர்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இரும்புக் கரம் கொண்டு அந்த போராட்டத்தை அடக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிடுங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை புரிந்த நேரத்தில், இப்படி நடந்துள்ளது துரதிட்டமானது. இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
சிலர் மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. இரும்புக் கரம் கொண்டு இதனைச் சீர் செய்யவேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும்” என்றும் கவலைத் தெரிவித்தார்.
மேலும், “நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதனிடையே, டெல்லி வன்முறை குறித்த ரஜினிகாந்த்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்,
சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க; இந்த வழி நல்ல வழி” என்று பதிவிட்டுள்ளார்.