செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்! நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
By Aruvi | Galatta | Jun 04, 2020, 04:46 pm
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் ரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி” என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் செயல்பாட்டை பாராட்டும் வகையில், நடிகர் ரஜினிகாந்த், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு நேற்று நன்றி கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், “மதிப்பிற்குரிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு” என்று தொடங்கி, “தமிழ் மொழிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், அர்ப்பணிப்புக்கும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய் நிறுவனத்திற்கு இயக்குநரை நியமனம் செய்தமைக்கும் எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து கடிதத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.