“ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா?” அண்ணாமலை சூசகம்.. எடப்பாடி பழனிசாமி மறுப்பு..!
தமிழக அரசியலில், அதிமுக - பாஜக ஒரே கூட்டணியாக இருக்கும் நிலையில், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்.
ஆனால், அதே நேரத்தில், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால், ராஜேந்திர பாலாஜி பாஜக வில் இணைய உள்ளதாக செய்திகள் பரவியது.
டெல்லியில் அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் பாஜகவில் சேர உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது.
அதாவது, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் முறை கேடு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கு முதல், ஆவின் முறைகேடு வரை ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே, அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் முகாமிட்டுள்ளது, தமிழக அரசியலில் கூடுதல் சந்தேகத்தை கிளப்பி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியான சூழலில் தான், பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் பாஜக வில் இணைவது தொடர்பாக” செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, “யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும், அதே நேரத்தில் அரசியலில் எந்த ஒரு கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது” என்றும், சூசகமாக பதில் அளித்தார்.
“சில கட்சிகளில் உரிய தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும், சில கட்சிகளில் சுதந்திரமாகச் சிலரால் செயல்பட முடியாது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“அதனால் தான் பாஜகவை பெரும்பாலானவர்கள் தேடி வருகிறார்கள் என்றும், எங்களுடைய சித்தாந்தத்தை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை ஏற்றுக்கொள்வோம்” என்றும், மிகவும் நாசுக்காக அவர் பதில் அளித்தார்.
இதனையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, “ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன” என்று, குற்றம்சாட்டினார்.
அத்துடன், “ராஜேந்திர பாலாஜி அதிமுக வில் தான் உள்ளார் என்றும், பாஜக வில் அவர் இணைய மாட்டார்” என்றும், கூறினார்.
மேலும், “ராஜேந்திரபாலாஜி சொந்த வேலைக்காக டெல்லி சென்றுள்ளார் என்றும், கூட்டணி கட்சி தலைவரைப் போய் சந்தித்தால் அவர் பாஜகவில் இணைய போகிறார் என்ற அர்த்தமில்லை” என்றும், எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
இதனிடையே, அதிமுக - பாஜக ஒரே கூட்டணியாக இருக்கும் நிலையில், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.