வெளி மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போட்டு நூதன போராட்டம்!
By Arul Valan Arasu | Galatta | 03:25 PM
தஞ்சையில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டுப் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சையில் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் வேலைகள் அந்தந்த மாநிலத்தவர்க்கே வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாநிலங்கள் தோறும் பல தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், அப்படி எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லை.
இதனால், தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அவ்வப்போது தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசின் தொழிற்சாலைகள், அலுவலகங்களில் 90 விழுக்காடு வட மாநிலத்தவர்களைத்தான் வேலைக்குச் சேர்க்கிறார்கள் என்று குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சையில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் கடைகள் வைத்திருப்பதாகச் செய்திகள் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த தமிழ் தேசிய கட்சியினர், வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிக அளவு கடைகள் நடத்தி வருவதால், தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், வேலை வாய்ப்புகள் பறிபோவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், தங்களது போராட்டத்தை நூதன முறையில் கையாண்ட அவர்கள், தஞ்சையில் செயல்பட்டு வந்த வெளிமாநிலத்தவர்களின் கடைகளுக்குப் பூட்டுப் போட்டு, துண்டுப் பிரசுரங்களை ஒட்டினர். போராட்டம் காரணமாக, பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.