தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி சில தினங்களுக்கு முன் பேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு, “தற்போதைய 4 வளாக கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தை சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. ஆனால், இதன் பெயரை மாற்ற முயற்சிப்பது தவறானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காகத்தான் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இப்போது பெயர் மாறினால் சிறப்பு அந்தஸ்து பெறுவதே சிக்கலாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹைஇன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்ஜியமாகிவிடும். தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை 5 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதியுதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டமளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாக பணிகளும் கேள்வியாகும்.

தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து துணைவேந்தர் பதவி இயக்குநராக மாறக்கூடும். மேலும், இடஒதுக்கீடுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணமும் உயரும் என்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகம்தான் தமிழக மாணவர்கள் பொறியியல் கனவுக்கு உயிரூட்டுகிறது. எனவே, கல்வியாளர்கள் கருத்துகளை கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

42 வருட கால சிறப்பு மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படும். பல்வேறு வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும்” .

என்று சொன்னது.

எதிர்ப்புகள் வந்தபோதிலும் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றவும், புதிதாகப் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது. அதன் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் போய்விடும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “பல்கலைக்கழகத்தை இரணடாகப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்வி குறியாகும்.

பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முடிவை அரசு கைவிட்டு அதன் புகழையும், கவுரவத்தையும் தக்கவைக்க வேண்டும். எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது” என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.