இடைவெளி விடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுள்ளது.

இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர், மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் சுற்றியுள்ள மழை நீரின் அளவு குறைந்த பிறகு மின்விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

p1

இதேபோல், சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை,ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேஷபுரம், ராயபுரம் (ஆர்பிஐ) ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி உள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டது.

p2

அதன்பின் கரையை கடக்கும் திசை மாறியதாக தெரிவித்த வானிலை மையம், கரையை கடக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.