கொடுமை.. “பள்ளிக்கு தாலி அணிந்து சென்ற 9 ஆம் வகுப்பு மாணவி!”
9 ஆம் வகுப்பு மாணவி தாலியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுரையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில் தான், கடந்த சில நாட்களாக அந்த மாணவி பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில், நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்திருக்கிறார்.
அப்போது, அந்த 17 வயது பள்ளி மாணவி, கழுத்தில் தாலியுடன் வந்திருப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன.
இதனையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் காவல் துறையினருக்கு புகார் கொடுத்து விட்டு, உடனடியாக குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு விரைந்துச் சென்று, அந்த மாணிவியை அழைத்து விசாரித்து உள்ளனர்.
அப்போது, அந்த மாணவி தனக்கு நடந்த அவசர திருமணம் பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உள்ளார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவியை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று அந்த புகாரின் அடிப்படையில், மாணவியின் பெற்றோர், அவருக்கு தாலிகட்டிய அருண் பிரகாஷ் மற்றும் அருண் பிரகாஷின் பெற்றோர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதே நேரத்தில், திருமணம் ஆன அந்த 9 ஆம் வகுப்பு மாணவியை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், அவரை அங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
அத்துடன், இது தொடர்பாக சமூக நலத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, பள்ளிக்கு தாலி அணிந்து வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.