பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு காவல் துறை சலுகை?
இந்தியாவையே உலுக்கிப் பார்த்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் சலுகை காட்டியதாகப் புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பதறிப்போன மாணவிகளின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு , ஹெரைன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இப்படி, தமிழ்நாட்டையே, கடும் பீதியடைய வைத்த இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
அதன்படி, தற்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும், இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அத்துடன், கடந்த 21 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்களும் இன்று 9 பேரிடமும் வழங்கப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த, ரகசிய வாக்குமூலத்தின் நகல்கள் கைதான 9 பேருக்கும் வழங்கப்பட்டது. அதன் பிறகு, இந்த பாலியல் வழக்கின் விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில் தான், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனமான (TN 30 G 0453) கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென்று நிறுத்தப்பட்டது.
அப்போது, அங்கு காத்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிக முக்கியமாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்து உள்ளனர். அவர்கள், தங்களது உறவினர்களிடம் இந்த தருணத்தில் மனம் விட்டு பேசிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், குறிப்பிட்ட அந்த காவல் வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றிருக்கிறது.
இந்த நிலையில் தான், கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரின் அனுமதியுடன் நடுரோட்டில் வைத்து, தங்களது உறவினர்களை சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
அதாவது, தமிழ்நாட்டையும் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையே கடுமையாக உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை, நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், சட்ட விதிகளை மீறி அவர்களது உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது ஏன்? என்றும், எந்த அடிப்படையில் இதுபோன்ற சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது ஏன்? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக முன்வைக்கப்படுவது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்து உள்ளது.
குறிப்பாக, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், நீதிமன்றத்தின் முன் முறையாக அனுமதியைப்பெற வேண்டும் என்றும், ஆனால் கொடூர பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நீதிமன்ற விதிகளை மீறி உறவினர்கள் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், சம்ந்தப்பட்ட போலீசாருக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.