விற்ற குழந்தையைத் திரும்பக் கேட்டதால் வழக்கு!
By Arul Valan Arasu | Galatta | 03:40 PM
விற்ற குழந்தையைத் திரும்பக் கேட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அடுத்துள்ள வடகரையைச் சேர்ந்த கருப்புசாமி - ரம்யா தம்பதியினர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இருவரும் பொள்ளாச்சி அருகில் உள்ள கிணற்றுக்கடவு பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்.
ரம்யாவுக்கு குழந்தை பிறந்த பிறகு, இதயம் சம்பந்தமான நோய் ஏற்பட்டதால், குழந்தையை வளர்க்க முடியாத சூழல் அந்த தம்பதிக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, பொள்ளாச்சி அருகில் உள்ள குருஞ்சேரியில் வசிக்கும் குப்புசாமி - சண்முகப்பிரியா தம்பதியினரிடம், கடந்த ஆண்டு 40 ஆயிரம் ரூபாய்க்கு, குழந்தையை விற்றுள்ளனர்.
இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த ரம்யா, கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால், தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை உணர்ந்த கருப்புசாமி, தான் கடந்த ஆண்டு விற்ற குழந்தையை குப்புசாமியிடம் கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த குப்புசாமி - சண்முகப்பிரியா தம்பதியினர், குழந்தையைக் கொடுக்க முடியாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, குழந்தையைக் கேட்டு, கருப்புசாமி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.