மக்களே உஷாரா இருங்க.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
“தென் கிழக்கு வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக” இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. அதன்படியே, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே, கடந்த 4 நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, “தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் கன மழை பெய்யும்” என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதாவது, “தென் கிழக்கு வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக” இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
“இந்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு திசையில் 11 ஆம் தேதி காலை வட தமிழகம் அருகே வரும்” என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
“இதன் காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை தொடரும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக, “தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக” தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்” தெரிவித்து உள்ளது.
இந்த மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 ஆந் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
அதே போல், “வானிலை மையத்தின் ரேடார்கள் இயக்கம் குறித்து சந்தேகம் வேண்டாம் என்றும், அவை செயல்பாட்டில் தான் உள்ளன” என்றும், தமிழகத்தின் தென்மண்டல வானிலை அய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை ஒட்டியை பகுதிகள், இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், “தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.