இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இங்கிலாந்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார்.
அதனைத்தொடர்ந்து பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால் 'முல்லைப்பெரியாறு அணையின் தந்தை' என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.
மேலும் தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று (ஜனவரி 15) தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 'பென்னிகுவிக்' பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்த வகையில் பென்னிகுவிக் 181-வது பிறந்தநாள் இன்று தேனி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் ஆகியோர் இன்று காலையில் பென்னிகுவிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்தனர். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தேனி பாலார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் நினைவு கலையரங்கம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். தேனி பென்னிகுவிக் நகர், கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் உள்பட பல இடங்களிலும் பென்னிகுவிக் பிறந்தநாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லி நகரில் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் முல்லைபெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைக் காக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேம்பர்லியில் பென்னிகுயிக்கின் சிலையை நிறுவ, அங்கு வாழும் தமிழர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.